‍3 நாள் ‘ரெய்ஸினா டயலாக் 2020’ மாநாடு – டெல்லியில் நடக்கிறது!

புதுடெல்லி: ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட மொத்தம் 13 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்க‍ேற்கும் ‘ரெய்ஸினா டயலாக் 2020’ என்ற பெயரிலான புவிசார் பொருளாதார வருடாந்தி உச்சிமாநாடு இன்று(ஜனவரி 14) டெல்லியில் துவங்குகிறது.

இம்மாநாடு மொத்தம் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதன் துவக்க நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இம்மாநாட்டில் மொத்தம் 105 நாடுகளைச் சேர்ந்த 180க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல நாடுகளைச் சேர்ந்த துணை வெளியுறவு அமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் ராணுவத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில், இந்தியா சார்பாக, வெளியுறவு அமைச்சர ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி கரன்பீர் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

ஈரான் நாட்டில் போர் சூழல் நிலவும் நிலையிலும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜாவித் ஜப்ரி, இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.