ஜலந்தர் : தீவிர வாத தொடர்புடைய 3 காஷ்மீர் மாணவர்கள் கைது

லந்தர், பஞ்சாப்

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 3 மாணவர்கள் தீவிரவாத தொடர்பு உள்ளதாக எழுந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் பல தீவிரவாத இயக்கங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அன்சர் கஸ்வாத் உல் இந்த் அமைப்பும் ஒன்றாகும். இந்த அமைப்பின் தலைவர் ஜாகிர் மூசா என்பவர் ஆவார். இந்த அமைப்பு பாகிஸ்தானின் ஜைஷ் எ முகமது என்னும் தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பாகும்.

பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் நகரில் உள்ள காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 3 மாணவர்களுக்கும் இந்த அன்சர் கஸ்வாத் அமைப்புக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை ஒட்டி அவர்கள் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாத தொடர்பு உறுதியானதை அடுத்து மூவரும் ஜலந்தர் நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான யூசுஃப் ரஃபிக் பட் என்பவர் காஷ்மீர் மாநிலம் நூர்புராவை சேர்ந்தவர் ஆவார். இவர் அன்சர் கஸ்வாத் அமைப்பின் தலைவர் ஜாகிர் மூசாவின் ஒன்று விட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவரில் ஒருவர் ஸ்ரீநகரை சேர்ந்த ஜாகித் குல்சார் மற்றும் புல்வாமாவை சேர்ந்த முகமது இதிரிஷ் ஷா ஆகியோர் ஆவார்கள்.

இந்த கைது குறித்து தெரிவித்த பஞ்சாப் காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங், “கைது செய்யப்பட்ட மாணவர்களின் அறையில் சோதனை இட்டபோது வெடிகுண்டுகள், ஒரு ஏகே 47 துப்பாக்கி, மூன்று இத்தாலிய துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் ஜலந்தரில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்த வந்துள்ளனர். இவர்கள் கூட்டளிகள் யாரேனும் வேறு கல்லூரியில் படிக்கிறார்களா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.