3லட்சம் முதல் 4லட்சம் வரை: பல ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனை செய்த பலே ‘நர்ஸ்’ சிக்கினார்… (ஆடியோ)

சேலம்:

குழந்தைகள் திருட்டு போவது தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பல ஆண்டுகளாக குழந்தைகளை திருடி விற்றுவந்த முன்னாள் நர்ஸ் ஒருவர் சிக்கியுள்ளார். அவர் குழந்தைக்கு விலை பேசும் ஆடியோவும் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகள் திருட்டை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பல இடங்களில் குழந்தைகள் திருட்டும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக  சேலம் அருகே ராசிபுரத்தில் பிறப்புச் சான்றிதழுடன் குழந்தைகள் விற்பனை  நடைபெற்று வருவதாகவும் தகவல் பரவியது. இது தொடர்பாக காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், செவிலியர் ஒருவர் குழந்தைக்கு விலைபேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில் பேசிய நர்ஸ்,  சிவப்பான ஆண் குழந்தை, 3 கிலோ எடையுடனும் இருந்தால் குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் வரை ஆகும் என்றும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் என்றும் பேரம் பேசுவது வெளியாகி உள்ளது. அத்துடன், மேலும்,  70 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றுத் தரப்படுவதாக தெரிவிக்கிறார்.

கருப்பு நிற பெண் குழந்தையின் விலை 2.4 லட்சம் ரூபாய் என்றும், சிவப்புநிற பெண் குழந்தையின் விலை 3.2 லட்சம் ரூபாய் என்றும், கறுப்பு நிற ஆண்குழந்தையின் விலை ரூ.3.5 லட்சம் என்றும், அழகான அமுல் பேபி போன்ற குழந்தை ரூ.4.2 லட்சம் என்றும் விலை பேசுவதும் அந்த ஆடியோவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் விருப்ப ஓய்வுபெற்ற நர்ஸ் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் சுமார் 10 ஆண்டு காலம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியதும், கடந்த  2 ஆண்டுகளுக்கு முன்புதான்  விருப்ப ஓய்வு பெற்றதும் தெரிய வந்தது.

குழந்தை திருட்டில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வந்த அந்த நர்சின் பெயர் அமுதா என்பதும், இவர் தரகராக இருந்து திருட்டு  குழந்தைகளை வாங்கி, விற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின்போது,  3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும், மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நர்ஸ் அமுதாவின் ஆடியோ உரையாடல்…