பாலக்காடு:

கேரளாவின் பாலக்காடு வனப்பகுதியில் தண்டர் போல்ட் அதிரடிப்படையினர் மேற்கொண்டு வந்த தேடுதல் வேட்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கேரள மாநிலம் வயநாடு, பாலக்காடு  உள்பட தமிழகம் கேரளா எல்லைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதிகளில் அவ்வப்போது தேடுதல் வேட்டையில் தமிழகம் மற்றும் கேரள காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதிகளில் வசிக்கும் மலைவாசி மக்களை, மாவோயிஸ்டுகள் மூளைச்சலவை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய உளவுத்துறை. இந்தியாவில் பாலக்காடு எல்லைப்பகுதி,  வயநாடு, மலப்புரம் உள்பட  30 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து  உள்ளதாக  எச்சரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து கேரளாவில் மாவோயிஸ்டுகளை வேட்டையாட அமைக்கப்பட்டுள்ள தண்டர் போல்ட் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது  பாலக்காடு மாவட்டம் மஞ்சக்கட்டி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கேரள அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சுமார்  50 தண்டர்போல்ட் போலீசார்  சுற்றி வளைத்தனர். இதையறிந்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பிக்கும் வகையில், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே சுமார் 1 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

இதில், 3 மாவேயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது. இறந்து போன மாவேயிஸ்ட்கள் யார் என விரைவில் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று பகுதியில் வேறு ஏதேனும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.