ஈரோடு:

ரசு பள்ளி மாணவர்களுக்கு  பட்டய கணக்காளர் (சிஏ – Chartered account) தேர்வுக்கான 3 மாத இலவச ஆன்லைன் வகுப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் ஊராட்சி முகாம் அலுவலகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை வகுப்புகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையில் மாணவ, மாணவி யர்களின் நலன்கருதி மற்றும் ஒரு புதிய முயற்சியாக பட்டயக்கணக்காளர் பயிற்சியினை அறிவித்து செயல்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக, அரசின் பள்ளிக்கல்வித்துறையும், இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகமும் இணைந்து நடத்தும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பவுண்டேசன் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வெப்பினார் மூலம் நடைபெறும் இவ்வகுப்புகள் வரும் நவம்பர் மாதத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 10ந் தேதி முதல் செப்டம்பர் 20-ம் தேதி வரை சுமார் 3 மாதங்கள் நடைபெறவுள்ளது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் ஆறு நாட்கள் காலை 8 மணியிலிருந்து 11.15 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 8.15 மணி வரையிலும் நடைபெறும்.

பட்டயக்கணக்காளர் பாடத்திட்டத்திற்கு பதிவு செய்து, வரும் நவம்பரில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்களது பெயர், தந்தையின் பெயர், ஊர், பிறந்த தேதி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விபரங்களுடன் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற சான்றிதழ் அல்லது 12-ம் வகுப்பு தேர்வு நுழைவுச்சீட்டு ஆகியவற்றை இணைத்து ஸ்கேன் செய்து sircclasses@ical.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, மாணவ, மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பட்டய கணக்காளர் பவுண்டேசன் தேர்வினை சிறந்த முறையில் எதிர்கொள்ளலாம் என தெரிவித்தார்.