ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி – புதிதாக கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்!

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரின் சிவகளை அகழ்வாராய்ச்சியில் புதிதாக மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரின் சிவகளையில் தாமிரபரணி ஆற்றின் கரைகளில் தமிழக தொல்லியல் துறையினர் மே 25 முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், சிவகளையில் தொல்லியல் அலுவலர்கள் பிரபாகரன், தங்கதுரை, காசிலிங்கம் ஆகியோரும், ஆதிச்சநல்லுாரில் தொல்லியல் அலுவலர்கள் பாஸ்கரன், லோகநாதன் ஆகியோரும் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆதிச்சநல்லுாரில் இன்று தோண்டப்பட்ட குழியில் ஒரு முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது.

அதன் மேல்பாகம் சற்று உடைந்த நிலையிலும், அடிபாகம் நல்ல நிலையிலும் உள்ளது. தாழிக்கு அருகில் இரண்டு மனித கை எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.

சிவகளையிலும் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து இந்தாண்டின் செப்டம்பர் வரையிலும் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.