சட்டமன்ற- பாராளுமன்ற தேர்தல்: ஆகஸ்டு மாதம் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

டில்லி:

ந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள  3 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு  வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த, அடுத்த மாதம் (ஆகஸ்டு) பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டில்லியில் அமித்ஷா தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  மக்களவை தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள   மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது குறித்தும்,  ஆலோசனை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, அனைத்து மாநிலங்களுக்கும் விஜயம் செய்து பொதுத்தேர்தலுக்கான வியூகக்தை வகுத்து வரும் நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள செயற்குழுவிலும் தேர்தல் குறித்தே விவாதிக்கப்படும் என தெரிகிறது.

பாஜக கட்சி விதிப்படி மூன்று மாதத்திற்கு ஒரு முறை தேசிய செயற்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், அது கடைபிடிக்கப்படுவதில்லை. ஏற்கனவே கடந்த ஆண்டு (2017 ) செப்டம் பர் மாதத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஒரு வருடம் கழித்து,  அடுத்த மாதம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.