3 வார சிகிச்சை….பினராய் விஜயன் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்

திருவனந்தபுரம்:

கேரளா முதல்வர் பினராய் விஜயம் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் உடல் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.

இதற்காக கடந்த 19-ந்தேதி பினராயி விஜயன் அமெரிக்கா செல்வதாக இருந்தது. கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக பினராயி விஜயனின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.

கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருவதை தொடர்ந்து நாளை (3-ம் தேதி) அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கேரள கவர்னருடன் பினராயி விஜயன் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாக இன்று அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு 3 வாரங்கள் சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார். அவர் திரும்பி வரும்வரை அவரது இலாகா பொறுப்புகளை தொழிற்சாலைகள் துறை அமைச்சர் ஜெயராஜன் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.