டில்லி,

பொதுமக்களை ஏமாற்றும் வகையில் தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 3 ஆண்டு தடை செய்தும், அபராதம்  விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் முதல் நடிகர், நடிகைகள் வரை விளம்பரங்களில் நடித்து, தரமில்லாத பொருட்களை தரமானதாக பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் வெளியாகும் விளம்பரங் களுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. இதன் காரணமாக  யார் வேண்டு மானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற நிலையே நீடித்து வருகிறது.

மக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம்  இருந்தால், அந்த விளம்பரம் குறித்து இந்திய விளம்பர தர கவுன்சிலுக்கு (ஏ.எஸ்.சி.ஐ) புகார் அனுப்பலாம். புகார் உண்மை என்று தெரியவந்தால், அந்த விளம்பரத்தை நாளிதழ், டிவி உள்பட அனைத்து ஊடகங் களிலும் வெளியிடத் தடை செய்யப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து விசாரணை செய்து முடிவு தெரிவிப்பதற்குள் ஆண்டுகள் உருண்டோடி விடும்.

இதுபோன்ற சூழ்நிலையில் மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்க பரிந்துரைப்பது குறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்  திட்டமிட்டு வந்தது.

அதன்படி நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்து அது தொடர்பாக ஆராய நாடாளுமன்றக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையை தொடர்ந்து, தற்போது புதிய மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நுகர்வோர் பாதுகாப்புக் குறித்த புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த புதிய மசோதாவில் உள்ள ஷரத்துப்படி,  தவறான மற்றும் ஏமாற்றும் வகையில் உள்ள விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  தவறான விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் விளம்பரங்களில் ஈடுபடக்கூடாது என்றும்,  ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தவறான விளம்பரங்களில் நடிப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தப் புதிய மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.