சென்னை: கொரோனாவால் பலியானவர்களின் உடலை அடக்கம் செய்யும் போது யாரேனும் இடையூறு செய்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் அண்மையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பிரபல மருத்துவர் சைமன் என்பவர் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியது.

இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. இது சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

அதன் அடிப்படையில் பொது சுகாதாரச் சட்டத்தின்படி ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் தகனம் செய்வதை தடுக்க முயற்சிப்பதை தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

அவசரச் சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில்  தகனம் செய்வதைத் தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939, பிரிவு 74 ன்படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.