சென்னை:

பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம்  3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பாலகிருஷ்ணா ரெட்டி

தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி.  1998ம் ஆண்டைய வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டு உள்ளது. 1998ம் ஆண்டைய வழக்கின்போது பாலகிருஷ்ண ரெட்டி  பாஜகவில் இருந்தவர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 16பேரில் A8 தான் பாலகிருஷ்ண ரெட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதவியில் உள்ள  ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட் டாலே அவரது எம்எல்ஏ  பதவி மற்றும் அமைச்சர் பதவிகள் தானாகவே தகுதியிழந்து  விடும் நிலையில் சிறப்பு நீதி மன்ற தீர்ப்பு காரணமாக பாலகிருஷ்ணரெட்டி  பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து,  அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்தார். பாலகிருஷ்ணா ரெட்டியின் ராஜினாமா கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது பொறுப்பு அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதலாக வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில்,  சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.