சென்னை: தமிழக தலைநகரில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில், 53.64% நபர்கள் சென்னையின் ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திருவிக நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
திருவிக நகர் மண்டலத்தில் மட்டும் இதுவரை 210 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்தம் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ள ராயபுரம் மண்டலத்தை திருவிக நகர் மண்டலம் விஞ்சியுள்ளது. இந்தவகையில், இரண்டு மண்டலங்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 409 ஆக உயர்ந்துள்ளது.
அருகிலுள்ள தண்டையார்பேட்டை மண்டலத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 ஐயும் சேர்த்து, இந்த 3 மண்டலங்களிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 486 என்பதாக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இது 53.64% என்பது கவனிக்கத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, வடசென்னை என்று வருகையில், பாதிக்கப்பட்டோர் 56.07%. பொதுவாக, அதிக மக்கள் நெருக்கம் வாய்ந்த பகுதிகளில், இந்த வைரஸ் தொற்று அதிகம் இருக்கும் என்ற காரணத்தால், அத்தகைய நெருக்கம் வாய்ந்தப் பகுதியான வடசென்னையில் தொற்று அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
ராயபுரத்தைப் பொறுத்தவரை, டெல்லி மத மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் அதிகம் பரவியுள்ளதே தவிர, புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. சென்னையில் குணமடைவோர் விகிதம் 65.02% என்பது குறிப்பிடத்தக்கது.