கொரோனா முடக்கம் – உலகெங்கும் 30 விமான நிறுவனங்கள் காலி!

ஹாங்காங்: கேதே பசிபிக் ஏர்வேஸ் லிமிடெட் என்ற பெயரில் ஹாங்காங்கில் செயல்படும் விமான நிறுவனம் ஒன்று, தன் நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்ட பணிகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளதோடு, தனது பிராந்திய அலுவலகத்தையும் மூடுவதாக அறிவித்துள்ளது.

உலகளவில், பொருளாதாரத்தைப் பெரியளவில் நாசம் செய்த கொரோனா முடக்கம், இந்த விமான நிறுவனத்தை மட்டுமல்ல, சர்வதேச அளவில் பல பெரிய விமான நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

இதன் ஒரு பகுதியே, இத்தகையதொரு அறிவிப்பாகும். உலகம் முழுவதும் சுமார் 30 விமான நிறுவனங்கள், கொரோனா ஊரடங்கின்போது திவாலானதாக அறிவித்தன. தனது ஊழியர்களைப் பணிநீக்குதல் மற்றும் சம்பளத்தைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட விமான நிறுவனங்களின் எண்ணிக்கை மிகப்பல.

சர்வதேச விமானப் போக்குவரத்து கழகத்தினுடைய அறிக்கையின்படி, இந்த 2020ம் ஆண்டினுடைய இரண்டாவது பாதியில், விமான நிறுவனங்களுக்கு 77 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.