30 குழந்தைகள் பிரசவம்..  சிறப்பு ரயில்களில் விநோதம்..

ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கிட்டத்தட்ட 2 மாதங்கள் ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டது.

இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, சொந்த  ஊருக்கு கொண்டு செல்ல சிறப்பு ரயில்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் இயக்கப்பட்டன.

இந்த ரயில்களில் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிப் பெண்களும் பயணம் செய்தனர்.

பலர், ஓடும் ரயிலில் குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர்.

இதுவரை சிறப்பு ரயிலில்  30 குழந்தைகள் பிறந்துள்ளன.

சிறப்பு ரயிலில் கடந்த 8 ஆம் தேதி தான் முதல் குழந்தை பிறந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் இருந்து பீகார் சென்ற ரயிலில் இந்த பிரசவம் நடந்துள்ளது.

ஜாம்நகர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்குப் புறப்பட்ட ரயிலில் மம்தா யாதவ் என்ற நிறைமாத கர்ப்பிணி பயணித்தார். உடன் யாரும் வரவில்லை.

நள்ளிரவில் மம்தாவுக்குப் பிரசவ வலி உண்டானது. இது குறித்து அந்த ரயிலில் வந்த அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த அதிகாரிகள். மம்தா பயணம் செய்த பெட்டியைப் பிரசவ வார்டாக மாற்றினர்.

அங்கு பயணம் செய்தோர் வேறு பெட்டிகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர்.

சிறிது நேரத்தில் மம்தாவுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ‘கொரோனா குமாரி’’ என பிரசவம்  பார்த்த சக பெண் பயணிகள் பெயரிட்டுள்ளனர்.

’’ சிறப்பு ரயில்களில் பிறந்த குழந்தைகளும், அவர்களின் தாயாரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம்’’ என்று தெரிவித்துள்ளார், ரயில்வே செய்தி தொடர்பாளர் ஆர்.டி.பாஜ்பாய்.

– ஏழுமலை வெங்கடேசன்