புதுச்சேரி: கடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம் ஆகி உள்ளதாகவும், கடலோரக் காவல்படை உதவியை நாடியுள்ளதாகவும் புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் கூறி உள்ளார்.

நிவர் புயல் நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயல் கரையை கடக்கும் தினமான நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி வருவாய் அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது: புதுச்சேரியில் நாளை மதியம் 1.30 மணியளவில் நிவர் புயல் கரையை கடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே அரசு துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்பட முடுக்கிவிட்டுள்ளோம்.

புயலை வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு யாரும் செல்லக்கூடாது. மரம், மின்கம்பங்கள் காற்றில் சாய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாளை பேருந்துகள் இயக்கப்படாது.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். புதுச்சேரியில் இருந்து சென்றவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். காரைக்காலில் 83 படகுகளில் மீன்பிடிக்க சென்றவர்களில் 10 பேர் திரும்பி இருக்கின்றனர்ர். 48 பேர் கோடியக்கரையிலும், 5 பேர் ஆந்திராவிலும் பாதுகாப்பாக உள்ளனர்.

மீதமுள்ள 30 பேரை பற்றி எந்த தகவலும் இல்லை. கடலோர பாதுகாப்புப் படைக்குத் தகவல் தெரிவித்து அவர்களை பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம் என்று தெரிவித்தார்.