எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: மதுரை சிறையில் இருந்து 30 கைதிகள் விடுதலை

சென்னை:

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 30 பேர் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் கைதி கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு ஏற்கனவே  அறிவித்தது. அதன்படி,  முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி  மாதம் 25ம் தேதியுடன் 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள்  67 பேர்  விடுதலை செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து படிப்படிபயாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு வந்தனர். இதுவரை  219 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.  இந்த நிலையில், தற்போது மதுரை மத்திய சிறைச்சாலைகளில் இருந்து 30 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் அறிவுரை மற்றும் வாழ்த்துக்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

விடுதலையான கைதிகளை அவர்களது உறவினர்கள் சிறை வாசலில் இருந்து கண்ணீர் மல்க வரவேற்று அழைத்துச் சென்றனர்.