சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில், தேர்தல் பணிகளில் சுமார்  30 ஆயிரம் தேர்தல் பணியாளர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, 234 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  தேர்தல் ஆணையம், தேல்தல் பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் நியமனம், வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.

இன்னும் சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் களம் திகுதிகுவென எரியத்தொடங்கி உள்ளது.  அரசியல் கட்சிகளிடையே  கூட்டணி பேச்சுவார்த்தைகள், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது, தேர்தல் பிரசாரம் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அரசியல் களத்தில் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி,  தேர்தல் பணிகளை  தேர்தல் ஆணைய விதிமுறைகளுடன் சென்னை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது. இதுகுறித்து கூறிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் இதுவரை  3,740 வாக்குச் சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  6,100 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கிறார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பணியில் இதுவரை 20 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு  வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை உயர்ந்ததால் தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரம் பேராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்ற கூடிய அதிகாரிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வாக்கு சாவடி அலுவலர்கள் நியமிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

சென்னையில் இதுவரை ஒன்றரை  லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

சென்னையில் 64 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதனை இரட்டிப்பாக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் முதியவர்கள், நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி வழங்க மத்திய அரசு அனுமதியளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.