சென்னை மகளிர் 30 நாளை சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டம் !

சென்னையை சேர்ந்த 30 மகளிர் நாளை சபரிமலைக்கு செல்ல இருக்கின்றனர்.

கேரளாவில் உள்ள  பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம்  சமீபத்தில் தீர்ப்பளித்தது.  இதையடுத்து  சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள், கட்சிகள் சில இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின.இதனால் அவர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாமல் திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாஜக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருவதோடு இந்த விவகாரத்துக்காக கேரள சட்டமன்றத்தையும் முடக்கியது.

இதற்கிடையே பரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கேரள காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னை மனிதி அமைப்பைச் சேர்ந்த 30 பெண்கள் சபரிமலைக்கு  நாளை செல்ல இருப்பதாக அறிவித்துள்ளனர்.  அவர்கள் நாளை கோட்டயத்தை அடைய இருப்பதாகவும் பிறகு அங்கிருந்து சபரிமலைக்கு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துளளனர்.

கேரள முதல்வர்  பினராயி விஜயனிடம் அவர்கள் இ-மெயில் வழியாக உரையாடல் நடத்தியதாகவும், நாளை சபரிமலை கோயிலுக்கு அவர்கள் வரலாம் என்று கேரள காவல்துறையினர் தொலைபேசியில் அவர்களிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து மனிதி அமைப்பினர், “வழக்கமாக ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் முன் கடைபிடிக்கும் அனைத்து விரதங்களையும் முறைப்படி  நாங்கள் கடைபிடித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.