300 குஜராத் சிறுமிகள் தலா ரூ.45 லட்சத்துக்கு விற்பனை : மும்பையில் கொடூரம்

மும்பை

குஜராத்தை சேர்ந்த 300 சிறுமிகள் அமெரிக்கர்களுக்கு தலா ரூ 45 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2018 ஆம் வருடம் மார்ச் மாதம் மும்பையை சேர்ந்த நடிகையான பிரீத்தி சூட் என்பவரின் நண்பர் ஒரு அழகு நிலையத்தில் இரு சிறுமிகளுக்கு ஒரு புகைப்படத்தை பார்த்து மேக் அப் செய்வதை கண்டதாக தெரிவித்துள்ளார்.   இதனால் பிரீத்திக்கு இது விபசாரத்துக்காக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது  உடனே அவர் அங்கு சென்றுள்ளார்.

அந்த பெண்கள் குறித்து அவர் சாதாரணமாக விசாரித்துள்ளார்.  அதற்கு அந்த அழகு நிலைய பணியாளர்கள் அந்த சிறுமிகள் அமெரிக்காவில் உள்ள தங்கள் பெற்றோர்களிடம் செல்ல உள்ளதாக கூறி உள்ளனர்.    அதை உடனடியாக காவல் நிலையத்தில் வந்து தெரிவிக்குமாறு பிரீத்தி கூறி உள்ளார்.  அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.   வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த ஒரு இளைஞர் அந்த இரு பெண்களுடன் தப்பி விட்டார்.

உடனடியாக காவல் துறையினரை பிரீத்தி அழைக்கவே அவர்கள் அங்கு வந்து அங்கிருந்த நால்வரை கைது செய்து விசாரித்துள்ளனர்.  அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற காவலரின் மகன் ஆவார்.    கைது செய்யப்பட்ட ஆமிர் கான், தாஜுதீன், அஃப்சல் மற்றும் ரிஸ்வான் ஆகியோரிடம் விசாரித்ததில் அந்த இரு சிறுமிகள் (வயது 11 மற்றும் 17) மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த கும்பல் பங்கு கொள்ளும் வாட்ஸ்அப் எண் மூலம் இவர்களுக்கு தலைவனான ராஜுபாய் என அழைக்கப்படும் ராஜுபாய் கம்லேவாலா கைது செய்யப்பட்டான்.   அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.   இவர்கள் இதுவரை அமெரிக்காவுக்கு 300 குஜராத்தி சிறுமிகளை தலா ரூ.45 லட்சத்துக்கு விற்றுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோரைக் கண்டறிந்து அவர்கள் குழந்தைகளை தாங்கள் வளர்ப்பதாகக் கூறி விலைக்கு வாங்குவது வழக்கம்.   அத்துடன் இந்த குழந்தைகளின் சாயலில் உள்ள வேறு குழந்தைகளின் பாஸ்போர்ட்டை வாடகைக்கு வாங்கி அதன் மூலம் அமெரிக்காவுக்கு சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளனர்.

பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படங்களை போல் சிறுமிகளுக்கு மேக் அப் போடும் போது இவர்கள் பிடிபட்டுள்ளனர்.   மேலும் அமெரிக்கா சென்ற சிறுமிகளுடன் அனுப்பப்பட்ட பாஸ்போர்ட்கள் எந்த ஒரு முத்திரையும் இடப்படாமல் இவர்களுக்கு திரும்பி வந்துள்ளது.

இந்த வழக்கு கடந்த வருடம் பதியப்பட்ட போதிலும் இந்த பாஸ்போர்ட் எப்படி முத்திரை இன்றி திரும்பி வந்தது என்பதும் இந்த சிறுமிகளை யார் எதற்காக வாங்கினார்கள் என்பது குறித்தும் இன்று வரை எந்த தகவலும் இல்லை.