ஐதராபாத்:

தெலங்கானா மாநிலத்தில் 300 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இன்ஃபுளுவன்சா என்ற வைரஸ் மூலம் தாக்கும் நோய் தான் பன்றிக் காய்ச்சல், பன்றிகள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, உடல் சோர்வு,மூக்கில் நீர்வடிவது முக்கிய அறிகுறிகளாகும்.

கடந்த சில வருடங்களாக இந்தியாவை மிரட்டும் நோயாக பன்றிக் காய்ச்சல் மாறிவருகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 77 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 2,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி மாதத்துக்கு இடைப்பட்ட காலத்திலேயே பன்றிக் காய்ச்சல் அதிகம் பரவும் வாய்ப்பு என கூறப்படுகிறது. அதிக குளிர் இருக்கும் போது, பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தெலங்கானா மாநில சுகாதாரத் துறையினர் கூறும்போது, குளிர்காலம் குறையும் போது, பன்றிக் காய்ச்சலின் தாக்கமும் குறைந்துவிடும். தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலர் குணமாகி வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் இந்த விசயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கை கழுவுதல், குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.