சென்னையில் 32.3 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன்! ஆய்வில் தகவல்

சென்னை: நோய் எதிர்ப்புதிறன் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், சென்னையில்  32.3 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 1,93,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,  கொரோனா பரவலை அடுத்து, சென்னையில் நடத்தப்பட்ட நோய் எதிர்ப்பு திறன் கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவில்,  32.3 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த ஆய்வு  தமிழகம் முழுவதும் இந்த ஆய்வு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை,  இந்திய மருத்துவக் கவுன்சிலான ஐசிஎம்ஆர், நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் நடத்தியது. இதில் 1.2% பேருக்கு நோய் எதிர்ப்புத்திறன் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையின் 15 மண்டலங்களிலும் மாநகராட்சி சார்பில் இருகட்டமாக நடத்தப்பட்ட ஆய்வில், சென்னைவாசிகளில் 32.3% பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், 32.3% பேருக்கு நோய் எதிர்ப்புத்திறன் உருவாகியிருப்பதாக தெரிந்தாலும், முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார். எதிர்ப்புத்திறன் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டாலும் எத்தனை நாட்கள் இந்த எதிர்ப்புத்திறன் உடலில் இருக்கும் என்பது உறுதி செய்யப்படாததால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மக்களின் நோய் எதிர்ப்புத்திறனை கண்டறியும் ஆய்வு, சுகாதாரத்துறை சார்பில் தொடங்கியுள்ளது. இதற்காக மும்பையைச்சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 3,690 பேர், கோவையில்1,260 பேர், திருச்சியில் 1,140 பேர் என தமிழகம் முழுவதும் 26,640 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் 2ஆம் வாரத்திற்குள் இந்த ஆய்வு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.