டெல்லி: கொரோனா களப்பணியின்போது நாடு முழுவதும் 382 டாக்டர்கள் உயிரிழந்து இருப்பதாக வும், தமிழகத்தில  32 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாராளுமன்றத்தில் கொரோனா தொடர்பான விவாதத்தின்போது, கொரோனா களப்பணியில் மரணம் அடைந்த மருத்துவர்கள் குறித்து தகவல் இல்லை என்று மத்தியஅரசு கூறியது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்திய மருத்துவ சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா  வைரஸ் தொற்று தடுப்பு பணியில் மருத்துவர்கள் சிறப்பான சேவையாற்றி வருகின்ற னர். இதுவரை களப்பணியின்போது,  382 டாக்டர்கள் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், இதுகுறித்து பாராளுமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் எதுவும் கூறாதது வேதனையளிக்கிறது என்று  தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கமான ஐஎம்ஏ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்தியா வில் கொரோனா களப்பணியில் பணியாற்றிய சுகாதாரத் துறையைச் சேர்ந்த 382 டாக்டர்கள் இதுவரை மரணமடைந்துள்ளனர். மரணமடைந்த 382 டாக்டர்களில் 27 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்களும் உள்ளனர்.

உலகத்திலேயே இந்த அளவுக்கு எங்கும் டாக்டர்கள் மரணமடைந்தது இல்லை. ஆனால்,  நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், டாக்டர்கள் மரணம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மேலும் சுகாதாரத் துறை இணையமைச்சர் அஷ்வின் குமார் பேசும்போது, டாக்டர்கள் மரணம் தொடர்பாக தங்களிடம் எந்த புள்ளி விவரங்களும் இல்லை என்று கூறினார்.

மத்திய அமைச்சர்களின் இதுபோன்ற செயல்கள் தங்களுக்கு  மிகவும் வேதனை அளிக்கிறது. உயிர்காக்கும் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை, மத்தியஅரசு புறக்கணித்து, அவையில் பேசியதற்கு இந்திய மருத்துவர்கள் சங்கம்  சார்பில் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சரின் இந்த பேச்சு கொரோனா களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இழிவு படுத்துவது போல உள்ளது.

இறந்த மருத்துவர்களை தியாகிகளாக மதிக்க வேண்டும், அவர்களது குடும்பத்தினருக்கு உரியன கிடைக்க வேண்டும் என்றார்.

இந்த பட்டியலில்,  தமிழ்நாட்டில் 32 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில், பெரும்பாலானோர் 50 வயதுக்கும் அதிகமான மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால், கொரோனா  களப்பணியின்போது இறந்த மருத்துவர்கள் குறித்த தரவுகளைத் திரட்டி வருவதாக ஐஎம்ஏ தமிழ்நாடு கிளை கூறியுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் ஐஎம்ஏ தலைமைச் செயலகம் தெரிவித்தபோது தமிழ்நாட்டில் 43 மருத்துவர்கள் கொரோனாவினால் இறந்துள்ளனர் என்று கூறியிருந்தது, ஆனால் இதனை சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் ஐஎம்ஏ தமிழ்நாடு கிளை மறுத்தது. இதையடுத்து, 32 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ தமிழ்நாடு  உறுதி செய்தது. ஆனால் மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்து வருவதாக ஐஎம்ஏ தமிழ்நாடு தெரிவித்து உள்ளது.