பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய 32 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை தேர்வுகள் எழுதிய 32 எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற 80 மாணவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
ஜூலை 3ம் தேதி நிலவரப்படி, 7.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 14,745 பேர் கலந்து கொள்ளவில்லை. உடல்நிலை சரியில்லாததால் மொத்தம் 863 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த வாரம், ஹாசனைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொண்ட போதிலும், மாணவர் ஜூன் 25 அன்று ஒரு தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. தேர்வு எழுதிய சிறிது நேரத்தில் அந்த மாணவருக்கு கொரோனா உள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.
முன்னதாக மார்ச் 27 முதல் ஏப்ரல் 9 வரை திட்டமிடப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. மே மாதம், கர்நாடக அரசு ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தது.