எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: வேலூர் சிறையில் இருந்து இன்று 32 கைதிகள் விடுதலை

வேலூர்:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேலும் 32 ஆயுள் தண்டனை கைதிகள்  வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வந்த 3 பெண்கள் உள்பட 32 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் கைதி கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு ஏற்கனவே  அறிவித்தது. அதன்படி,  முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி  மாதம் 25ம் தேதியுடன் 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள்  67 பேர்  விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட சிறைகளில் இருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், வேலூர் சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வந்த 3 பெண்கள் உள்பட 32 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும்,  சிறையில் வேலை பார்த்ததற்கான கூலி பணம், மற்றும் உடைமைகளை சிறைத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

விடுதலையான கைதிகளை, அவர்களின் உறவினர்கள் காத்திருந்து  மகிழ்ச்சியோடு சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.