டெல்லி: இந்தியாவில் இன்றோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டு 322 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய லாக்டவுன் செயல்படுத்தி இன்றோடு 322 வது நாள் ஆகிறது. இது வரை, இந்தியாவில் 1.58 லட்சத்துக்கும் மேற்பட்ட  கொரோனா இறப்புகளும், 1.08 கோடிக்கும் அதிகமான கொரோனா தொற்றுகளும் வழக்குகள் பதிவாகியுள்ளன.

நாட்டில் இதுவரை மொத்தம் 1.05 கோடி மக்கள்கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர். நாட்டின் கொரோனா மீட்பு விகிதம் தொடர்ந்து உயர்ந்து, இப்போது 97.25 சதவீதமாக உள்ளது. உலகளவில், கொரோனாவால் 10.68 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, இது வரை 23.38 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

இந்தியா, பல நாடுகளுடன் சேர்ந்து, கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியதோடு, சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியையும் தொடங்கி உள்ளது.

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டு ஒப்புதலும் வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 65 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.