மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு! ஓ.பி.சிங்

வேலூர்:

த்திய தொழிற்பாதுகாப்பு படையில் மகளிருக்கு  33 சதவீதம் இடஒதுக்கீடு விரைவில் அளிக்கப்படும் என அதன் தலைவர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் மண்டல பயிற்சி மையம் உள்ளது. இங்கு 782 பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட ஓ.பி.சிங் சிறப்பு பேசியதாவது,

கடந்த 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள படை வீரர் பணியிடங்கள் உள்பட மொத்தம் 1.80 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

மேலும், இந்த ஆண்டு மட்டும் 19 ஆயிரம் பேருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு படையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர்,   தற்போது தமிழ்நாட்டில் சிவகங்கையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 112 படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இந்த வீரர்கள் விரைவில் அரக்கோணத்தில் உள்ள மண்டல பயிற்சி முகாமுக்கு மாற்றப்பட்டு, அங்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றும், தற்போது பயிற்சி முடித்துள்ள 782 பேர் உள்பட 12,650 பேர் அடுத்த மாதம் படையில் இணைக்கபட இருப்பதாககூறினார். இதன் காரணமாக  இப்படையில் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலை உருவாகும் என்றார்.

மேலும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் மகளிருக்கு  33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவது விரைவில் அமல்படுத்தப்படும் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்  ஓ.பி.சிங் கூறினார்.