நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும் என்கிற மசோதா –நாடாளுமன்றத்தில் ஒரு மாமாங்கமாக கிடப்பில் உள்ளது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக  கூக்குரல் எழுப்பும் கட்சிகள் –தங்கள் கட்சியில் மகளிருக்கு 33% இடங்களை கொடுப்பதில்லை.

ஆனால் ஒடிசா முதல்-அமைச்சரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் – வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட தனது கட்சியில் 33 சதவீத இடங்களை  பெண்களுக்கு ஒதுக்கியுள்ளார்.

சட்டசபை தேர்தலிலும் பெண்களுக்கு 33% இடங்கள் கொடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

ஒடிசாவில் மொத்தம் 21 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த இட ஒதுக்கீட்டின் படி –பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிட 7 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

நவீன் கட்சிக்கு கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் அமோக  ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.  அந்த மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள் 3.18 கோடி பேரில் –பெண்கள் -1.54 கோடி பேர் உள்ளனர்.

மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஷயத்தில் நவீனுக்கு அவர் தந்தை பிஜு பட்நாயக் தான் முன்னோடி.

பிஜு பட்நாயக் -1990 களிலேயே  பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 33% இடங்களை ஒதுக்கியவர்.

அந்த மாநில வேலை வாய்ப்பிலும் 33% இடங்களை ஒதுக்கியவர்-சீனியர் பட்நாயக்.

–பாப்பாங்குளம் பாரதி