பெங்களூரு

ரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் 3374 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துளது.

கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி முதல் நடந்து வந்தது.  கடந்த செவ்வாய்க்கிழமையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது.  தேர்தல் ஆணையம் வேட்புமனுக்கள் பரிசீலனையை தற்போது  நிகழ்த்தி வருகிறது.

இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி, “கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் 3374 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  இவர்களில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக 250 பேர், பாஜக சார்பாக 282 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பாக 231 பேர், சுயேச்சைகளாக 1673 பேர் மற்றும் மாநிலக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பாக 938 பேர் மனு செய்துள்ளனர்.

இதில் பெண் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் 16 பேரும், பாஜகவில் 17 பேரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் 14 பேரும் 60 சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்துளனர்.

மேலும் மனு தாக்கல் செய்தவர்களில் 5 பேர் 81 முதல் 90 வயதுள்ளவர்கள்.

நேற்று முதல் வேட்பாளர் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.   மேலும் ஒரு சிலர் மனுக்களை திரும்பப் பெருவதற்கும் வாய்ப்பு உள்ளது.  எனவே இதை இறுதிப்பட்டியல் என கூற முடியாது.”  என தெரிவித்துள்ளார்.