ஆம்பூர் :  
வேலூரை  சுற்றியுள்ள பகுதிகளில் வாத்து வளர்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
ஆம்பூர், வாணியம்பாடி  பகுதிகளில்  பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் வாத்து வளர்ப்பு தொழில் நடைபெற்று வருகிறது. அதேபோல் அந்த பகுதிகளில் தோல்  தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ளன.

கழிவு நீரை பருகி உயிர்விட்ட வாத்துக்கள்
            கழிவு நீரை பருகி உயிர்விட்ட வாத்துக்கள்

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் திருட்டுத்தனமாக பாலாற்றில் கலந்துவிடப் படுகிறது. இதன் காரணமாக  நிலத்தடி நீர் மட்டம் மாசு பட்டு, விவசாயம் செய்வதற்குகூட  நிலத்தடி நீர் அருகதையற்றதாகி உள்ளது. இதுபற்றி பலமுறை அரசிடமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்தும், தோல் முதலாளிகளின் பண  ஆசைகளுக்கு பலியாகி அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே பல முறை இதுபோன்று வாத்துக்கள் சாவு, மீன்கள்  மொத்தமாக செத்து மிதப்பது போன்ற துர் சம்பவங்கள் நடந்துள்ளன.
நேற்று வழக்கம் போல் வாத்துக்கள் மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது, தாகத்திற்காக பாலாற்றில் உள்ள நீரை குடித்த வாத்துக்கள் ஒவ்வொன்றாக சுருண்டு விழுந்து செத்தன.
வாத்துக்களின் உரிமையாளர் கோபி குடும்பத்தினர் இறந்த 3400 வாத்துக்களையும் பாலாற்றின் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
பாலாற்றின் நீரை குடித்த வாத்துக்களுக்கே இதுபோன்ற நிலைமை என்றால் அரசு பாலாற்றிலிருந்தது  பம்ப் மூலம் எடுத்து வேலுர் மாவட்ட மக்களுக்கு அனுப்பும்  குடிநீரை  பயன்படுத்தும்  மக்களின்   கதி என்னவாகும். இதன் காரணமாக  மக்களுக்கு  என்னென்ன  புது புது நோய்கள் வரப்போகிறதோ?