தமிழகத்தில் 34,037 வழக்குகள்  நிலுவையில் உள்ளது! பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

டெல்லி:

மிழகத்தில் மட்டும் பல்வேறு நீதிமன்றங்களில்  34 ஆயிரத்து 37 வழக்குகள்  நிலுவையில் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நீதித்துறை தொடர்பான உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த மத்தியசட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 478 நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர்,  உத்திரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் உயர்நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என மாநில அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.  அதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தி தரும் பட்சத்தில் அதற்கு வழி வகை ஏற்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக  தெரிவித்தவர்,  தமிழகத்தில் மட்டும் 34,037 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாக  தெரிவித்தார். இந்த வழக்குகளை விரைந்து தீர்வுகாண சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மத்திய சட்டத்துறை பரிந்துரைத்து இருப்பதாகவும் அமைசர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.

அதுபோல, நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிக்காக 50% அளவிற்கு நிதி உதவி அளித்து வருவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.