தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 3,519 பேர் இன்று ஒரே நாளில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 10 பேர் மட்டுமே பதிவிப் பிரமாணம் எடுக்கவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 17, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 174, கிராம ஊராட்சி தலைவர் பதவிகள் 403, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2,943 என மொத்தம் 3,537 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 34 கிராம ஊராட்சித் தலைவர், 1,094 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 1,129 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 7 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. 2401 பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஒரே ஒரு கிராம ஊராட்சி வார்டு பதவிக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2400 பதவிகளுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்டத்தில் 3,529 பதவிகளுக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 8 இடங்களுக்கு மட்டும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று காலை நடைபெற்றது. முதலில் மூத்த உறுப்பினரான சி.தங்கக்கனி முதலில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து மற்ற 16 உறுப்பினர்களும் வார்டு வாரியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பாலசுப்பிரமணியன் (வளர்ச்சி), சந்திரசேகர் (தேர்தல்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 174 பேரும், 403 கிராம ஊராட்சி தலைவர்களும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் மூத்த உறுப்பினர்கள் முதலிலும், தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் பதவி பிரமாணம் எடுத்தனர்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,943 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2,925 பேர் பதவி பிரமாணம் எடுத்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் 10 பேர் பதவியேற்க வரவில்லை. மேலும், 7 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. ஒரு இடத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட ஊரக உள்ளாட்சி ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்றதை தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும். தொடர்ந்து மாலை 3 மணிக்கு மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்காத உறுப்பினர்கள் 11-ம் தேதி காலை 10 மணிக்குள் பதவியேற்றுவிட்டு, மறைமுக தேர்தலில் பங்கேற்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.