சாலைப் பள்ளங்களால் ஒரே வருடத்தில் 3597 பேர் பலி

டில்லி

டந்த 2017 ஆம் வருடம் சாலைப் பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் 3597 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் அனைத்து சாலைகளும் அடிக்கடி பழுது பார்ப்பதாக கூறப்படுகிறது.   ஆயினும் சாலைகளில் பல இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளன.  அது மட்டுமின்றி பல சாலைகளில் பெரிய பள்ளங்களும் உள்ளன.  இத்தைகைய சாலைகளில் பயணிப்போர் விபத்துக்குள்ளாகின்றனர்.   ஆயினும் நாட்டில் உள்ள பல நகராட்சிகளும், மாநகராட்சிகளும் சாலையை பழுதுபார்ப்பதில்லை.

சமீபத்தில் மத்திய காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த 2017ஆம் ஆண்டில் சாலைப் பள்ளங்களினால் ஏற்பட்ட விபத்துகளில் 3597 பேர் மரணம் அடைந்துள்ளனர்.    அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 10 பேர் மரணம் அடைகின்றனர்.   இந்த எண்ணிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு எண்ணிக்கையான 2324 ஐ விட 50% அதிகமாகி உள்ளது.

இவ்வாறு இறப்பவர்களின் எண்ணிக்கை உத்திரப் பிரதேச மாநிலத்தில் 987, மகாராஷ்டிராவில் 726. அரியானாவில் 522 மற்றும் குஜராத்தில் 228 ஆக உள்ளது.  இவ்வாறு இறப்பு நேரிடுவது  நகராட்சியின் திறமையின்மையை காட்டுவதாக  மத்திய காவல்துறை தெரிவித்துள்ளது.   அத்துடன் சாலைகளில் போடப்பட்டுள்ள தடுப்புகளும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் உயிரைக் குடித்துள்ளன.

இவ்வாறு இறப்பவர்கள் எண்ணிக்கை பயங்கரவாத செயல்களில் இறப்பவர்களை விட பன்மடங்கு அதிகமாகும்.   பயங்கரவாத தாக்குதல்களில் 2017 ஆம் ஆண்டு 803 பேர் இறந்துள்ளனர்.