கொல்கத்தா: மேற்கு வங்க  மாநிலத்தில் நடைபெற்று வரும் 5-ம் கட்ட தேர்தலில்  காலை 11 மணி நிலவரப்படி 36.02% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது.  ஜல்பைகுரி, கலிம்பாங், டார்ஜிலிங்புர்பா பர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன. 39 பெண்கள் உட்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.   வாக்குப்பதிவுக்காக  15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த தொகுதிகளில் 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. காலைமுதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. காலை 9.30 மணி நிலவரப்படி 16.15% வாக்குப்பதிவாகி இருந்தது. தற்போது பகல் 11 மணி நிலவரப்பபடி 36.02% வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் இந்த 45 தொகுதிகளில் 32-ல் திரிணமூல் காங்கிரஸும் 10-ல் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளும் வென்றன. பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த 45 தொகுதிகளில் 23-ல் திரிணமூல் கட்சியும் 22-ல் பாஜகவும் அதிக வாக்குகளைப் பெற்றன. ஆனால் சதவீத அடிப்படையில் பாஜக (45%) முதலிடத்தையும் திரிணமூல் கட்சி (41.5%) இரண்டாம் இடத்தையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

++++