பாட்னா:

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் மூதல் மூளைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், தற்போது காய்ச்சலுக்கு பலியாகும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாளில் மட்டும் சுமார் 133 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 36 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி பலியான தகவல் வெளியாகி உள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நமது மக்களிடையே  காய்ச்சல்கள் பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருந்தாலும், மூளைக்காய்ச் சல் நோய் குறித்து விழிப்புணர்வு கிடையாது. ஆனால், உயிரைப் பறிக்கும் ஆபத்தான மூளைக் காய்ச்சல் தற்போது பீகாரில் பரவி வருகிறது. இது பெரும்பாலும்  குழந்தைகளை பாதிக்கக்கூடியது .

ஒவ்வோர் ஆண்டும் ஆசியாவில், ‘மூளை காய்ச்சல்’, ‘ஜப்பானிய மூளை காய்ச்சலால்’ பாதிப்புக்கு ஆளாகும் 15 வயதுக்குட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளில் 10 ஆயிரம் பேர் இறந்துவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மூளை காய்ச்சலை ‘மெனிஞ்சைடிஸ்’என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தமிழில் மூளைச் சவ்வு அழற்சி என்று  அழைக்கப்படுகிறது.

தற்போது பீகார் மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல்  வெகுவேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் முதல் அங்கு மூளைக்காய்ச்சலை தடுக்க பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், முசாஃபர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில்  133 குழந்தை களுக்கு  மூளைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.

சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளில் 36 குழந்தைகள் கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்து இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் முதலே ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  முசாஃபர் நகர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கோடைக்காலங்களில் அந்த நோய் அதிகம் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது.  இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும் பெரும் காரணமாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.கே. சாகி , “குழந்தைகள் எதற்காக இறந்தார்கள் என்பது பற்றி முறையான ஆராய்ச்சி நடத்த வேண்டும். நாங்கள் கண்டுபிடித்தவரை இறந்த குழந்தைகள் அனைவரும் 90 சதவிகிதம் ரத்தத்தில் குளுகோஸ் குறைந்துள்ளது. இதனால் மற்ற அனைத்து குழந்தைகளும் தனி வார்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கிராமப்புறத்தைச் சேர்ந்த குழந்தைகள்”

மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பெரும்பாலான வார்டுகள் கிராமப்புறங்களில் இருந்து பெரும்பாலும் குழந்தைகளால் நிறைந்துள்ளன. பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த முதலமைச்சர் நிதீஷ் குமார், நோயை எவ்வாறு சமாளிப்பது என மக்களிடையே தகவல் மற்றும் விழிப்புணர்வு இல்லாதது எனத் தெரிகிறது என்று கூறினார்.