உள்நாட்டுச் சந்தையில் விற்பனையாவதில் 36 மருந்துகள் தரமற்றவை – ஆய்வில் தகவல்

சென்னை: சந்தையில் விற்பனையிலுள்ள மருந்துகளில் மொத்தம் 36 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இத்தகைய அறிவிப்புகள் வந்துகொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் விற்பனையாகும் அனைத்து வகையான மருந்து – மாத்திரைகளும், மத்திய & மாநில அரசுகளின் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்களால் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் போலிகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அக்டோபர் மாதத்தில் 1163 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், 1127 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், குடற்புழு நீக்கம், கிருமித் தொற்று மற்றும் தொண்டைப்புண் ஆகியப் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 36 மருந்துகள் தரமற்றவை என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு www.cdsco.gov.in என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தமிழகம், ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் மராட்டிய ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.