புதுடெல்லி:
ங்கிலம் தெரியாதவர்களின் வசதிக்காக, தமிழ் உட்பட, பல்வேறு மாநில மொழிகளில், 302 தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழில் மட்டும், 36 தீர்ப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வழக்குகளில், உச்ச நீதிமன்றம் வழங்கும் இறுதி தீர்ப்பு, ஆங்கிலத்தில் வழங்கப்படுவதே வழக்கம். இதை, ஆங்கிலம் தெரியாத மனுதாரர்கள் புரிந்து கொள்வதில், சிரமம் இருப்பதால், அதை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த மொழி மாற்ற நடவடிக்கை, உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என, கேரளாவின், கொச்சியில், 2017ல் நடந்த நீதித் துறை மாநாட்டில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினார்.

இதையடுத்து, மாநில மொழி மாற்றத்துக்கு தேவையான, கணினி மென்பொருளை, உச்ச நீதிமன்றத்தின் தொழில்நுட்ப பிரிவு தயாரித்தது. இதற்கு, அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், 2019ல் அனுமதி வழங்கினார். அதன் பின், இந்த மொழிமாற்று பணிகள், நடைமுறைக்கு வந்தன.

இது குறித்து, உச்ச நீதிமன்ற பதிவுத் துறை குறிப்பிட்டுள்ளதாவது:

ஆங்கிலத்தில் வெளியிடப்படும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், ஹிந்தி, தமிழ், அசாமி, கன்னடம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, மலையாளம், உருது மற்றும் வங்க மொழிகளில், மொழிமாற்றம் செய்யப்பட்டு, நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுவரை, ஹிந்தியில், 153; தமிழில், 36; பஞ்சாபியில், 10; மராத்தியில், 22; மலையாளத்தில், 18; பெங்காலி, தெலுங்கு, கன்னடம் மற்றும் அசாமி மொழிகளில், 46 தீர்ப்புகளும், மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இதன்படி, 302 தீர்ப்புகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.