இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 537 இந்தியர்களில் 360 பேரை நல்லிணக்கம் காரண மாக விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்து உள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் 355 பேர் உடன் சிறையில் உள்ள 5 பொது மக்கள்  விடுதலை செய்ய இருப்பதாகவும், அடுத்த வாரம் முதல்,  வாரம் 100 பேர் விதம் விடுதலை செய்யப்படுவார்கள், இந்த மாத இறுதிக்குள் 360 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமபத்தில், பாகிஸ்தான் உயர் ஆணையத்துக்கு அங்கு சிறையில் உள்ள 385 இந்திய மீனவர்களை யும், 10 கைதிகளையும் விடுவிக்கும்படி இந்திய அரசு ஒரு கடிதம் எழுதியது. அதுகுறித்து விவாதித்த பாகிஸ்தான் அரசு  பாகிஸ்தானில் சிறையிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான்  வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பாகிஸ்தானில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் 360 கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

வாரத்திற்கு 100 மீனவர்கள் வீதம் விடுதலைசெய்யப்படுவார்கள். முதற்கட்டமாக 100 இந்திய மீனவர்கள் வரும் திங்கட்கிழமை  விடுவிக்கப்படுவார்கள். மேலும் அவர்கள்  வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்கள். ஏப்ரல் 29ஆம் தேதியுடன் முழுவதுமாக அனைத்து கைதிகளும் ஒப்படைக்கப்படுவர்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டாக்டர் முகமது பைசல் உறுதிப்படுத்தி உள்ளார்.