nazi
ஜெர்மனி:
மரண முகாமில் 3,681 யூதர் இன மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 94 வயதாகும் மாஜி முகாம் மருத்துவ உதவியாளரிடம் அடுத்த மாதம் விசாரணை தொடங்கவுள்ளது.
2வது உலகப்போரின் போது ஹிட்லர் ஆட்சியில் லட்சக் கணக்கான யூதர் இன மக்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளும், ஆராய்ச்சிகளும் தற்போது வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த குற்றத்திற்கு துணை போனவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி நடந்து வருகிறது.
இந்த வரிசையில் 3,681 பேர் கொலைக்கு உதவியாக இருந்ததாக 95 வயது ஹூபர்ட்ஸ் என்ற முதியவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இவர் ஆஷ்விட்ஸ் பகுதியில் உள்ள நாஜி மரண முகாமில் 1943ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், 1944ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை சார்ஜென்டாக பணியாற்றியுள்ளார். பின்னர் 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை மரண முகாமில் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
இந்த மாதத்தில் மட்டும் குறைந்தபட்சம் மக்களை நாடுகடத்த பயன்படும் 14 ரயில்கள் பல இடங்களில் இருந்து இந்த மரண முகாமுக்கு வந்துள்ளது. நெதர்லாந்தில் உள்ள லையோன், வியனா, வெஸ்டர் போர்க் ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அனைவரும் முகாமில் உள்ள எரிவாயு அறைகளில் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முகாம் உதவியாளராக பணியாற்றிய ஹூபர்ட்ஸ் என்பவரிடம் விசாரணை நடத்த வடக்கு ஜெர்மனியின் ரோஸ்டாக் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் விசாரணைக்கு தகுதியுள்ளவராக இருப்பதாக நேற்று  நீதிமன்றம் கூறியது. வரும் பிப்ரவரி மாதம் 29ம் தேதி நியூபிராண்டன்பெர்க்கில் உள்ள வட கிழக்கு நகரில் இந்த விசாரணை நடக்கிறது.
முதல் அமர்வில் இவரது உடற் தகுதி குறித்த விசாரணை நடக்கவுள்ளது. விசாரணைக்காக இவர் நிற்கவோ அல்லது பயணம் செய்யவோ முடியுமா என்பது குறித்து ஆராயப்படுகிறது. அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் மாதம் முதல் தொடர்ந்து நடக்கும் எனத் தெரிகிறது.
இவருக்கும் இந்த படுகொலை சம்பவத்திற்கும் நேரடியாக தொடர்பில்லை. ஆனால், மக்கள் மொத்தமாக கொல்லப்பட்ட சமயத்தில் அங்கு என்ன நடந்தது என்பது இவருக்கு தெரியும். நாஜி மரண முகாமில் பணிபுரிந்தவர்களுக்கு தண்டனை வழங்கும் முறையை ஜெர்மன் கோர்ட் கடைபிடித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் அந்த மரண முகாமில் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டபோது, முகாமில் புத்தக காப்பாளராக பணியாற்றி 94 வயது முதியவரான ஓஸகர் குரோனிங் என்பவருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இது போல் அந்த முகாம் ஊழியர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. 1.70 லட்சம் பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெட்மோல்டை சேர்ந்த ரெயின்ஹோல்டு, 2.60 லட்சம் பேர் கொல்லப்பட்டதற்கு வடக்கு நகரத்தை சேர்ந்த கியேல் என்ற 91 வயது முதியவர் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் விசாரணைக்கு ஏற்ற உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னரே வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதில் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.