வேலூர்:

மிழகத்தின்  36வது மாவட்டமாக  ராணிப்பேட்டை மாவட்டம் இன்று உதயமாகி உள்ளது. அதன் நிர்வாக பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என  3ஆக பிரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை தமிழகத்தின் 35வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், மாநிலத்தின் 36வது மாவட்டமாக ராணிப்பேட்டையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழா ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நீலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தமிழ்நாட்டின்36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தை  தொடங்கி வைத்தார்.

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள  ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு ராணிப்பேட்டை கோட்டத்தில் ஆற்காடு, வாலாஜா ஆகிய தாலுகாக்கள் வருகின்றன. புதிதாக அரக்கோணம் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரக்கோணம், நெமிலி தாலுகாக்கள் இடம் பெறுகிறது. புதிதாக வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாகிறது. இதில் வாணியம்பாடி, ஆம்பூர் தாலுகாக்கள் இடம் பெறுகிறது.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக திவ்யதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டாக மயில்வாகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.