ரூ.3,700 கோடி மோசடி: 6½ லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடி என்ஜினியர்!

கைது செய்யப்பட்ட மிட்டல் ராஜ்நாத் சிங்குடன்

டில்லி,

6½ லட்சம் பேரை ஏமாற்றி ரூ.3,700 கோடி அளவிலான மோசடியில் ஈடுபட்ட  பலே கில்லாடி என்ஜினியர் கைது செய்யப்பட்டார்.

இவர் தனது செல்போன் மூலமே இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடன் சேர்த்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்த இவர்கள்மீது புகார் வந்ததையொட்டி இவர்களை கண்காணித்து வந்த அதிரடிப்படை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

இந்த மோசடியில் கைதாகியுள்ள எஞ்சினீயர் பெயர் பெயர்  அனுபவ் மிட்டல். 26 வயதேயான இளைஞன். பி.டெக் பட்டதாரி.  அவருக்கு உதவியாக இருந்த மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் செல்போன் வழியாக சுமார் 6½ லட்சம் சந்தாதாரர்களிடம் ரூ.3,700 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

விசாரணையில்  குறுகிய காலத்துக்குள் நூதனமுறையில் சில ஆயிரம் கோடி ரூபாயை இவர்கள் சம்பாதித்து இருப்பது  தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு அமித் பதக் கூறுகையில்,

2015-ம் ஆண்டு டெல்லியில் நொய்டாவில் ‘அப்ளாஸ் இன்போ சொலூயூசன்ஸ்’ என்ற நிறு வனத்தை மிட்டல் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் 3-வது நபரிடம் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாகவும் இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே, மாதம் ரூ.5,750 முதல் ரூ.57,500 வரை சம்பாதிக்கலாம் என்றும் செல்போனில் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சி அழைப்பு விடுத்தனர்.

அந்த நிறுவனம் செல்போனில் அனுப்பும் புதிருக்கு விடை அளித்து விட்டால், வாடிக்கையாளரின் சந்தா தொகைக்கு ஏற்ப தினமும் ரூ.25, ரூ.50, ரூ.75, ரூ.125 வழங்கப்படும் என்றும் இதில் கிடைக்கும் ஒவ்வொரு விருப்பத்திற்கும் (லைக்) தலா ரூ.5 கூடுதலாக அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதேபோல் 21 நாட்களுக்குள் கூடுதல் சந்தாதாரர்களை இணைத்தால் அதிகப் பணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.  இதற்காக பாஸ்வோர்டு ஒன்றையும் இணைத்து குறிப்பிட்ட சில இணையதளங்களுடன் சந்தாதாரரின் போன் இணைப்பையும் சேர்க்கும்படி அறிவித்தனர்.

இதற்காக காசியாபாத் நகரில் போலியான ‘சர்வர்’ தொடங்கி இருக்கின்றனர்.

இதை நம்பி நிதி நிறுவனங்களில் பணம் கட்டுவதுபோல் அனுபவ் மிட்டலின் நிறுவனத்தில் சுமார் 6½ லட்சம் பேர் பணத்தை கட்டி மோசம் போய் உள்ளனர்.

மிட்டல் மற்றும் அவருடன் மேலும் இரண்டு பேர் சேர்ந்துதான் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களின் மோசடி குறித்து புகார்கள் குவிந்ததை தொடர்ந்து நாங்கள் அவர்களை கண்காணிக்க தொடங்கினோம்.

ஆனால், அவர்கள் இணையதள முகவரியை அவ்வப்போது மாற்றிக்கொண்டே வந்தனர். இறுதி யாக  இவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படை போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர் என்றார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த மோசடியின் மூலம் கிடைத்த பணத்தில் ரூ.520 கோடி வரை இவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு வங்கிகளில் டெபாசிட்டும் செய்து இருக்கின்றனர்.

தவிர போலி நிறுவனத்தை நடத்திய அனுபவ் மிட்டல் ரூ.6 லட்சமும், அவருடைய உதவியாளர் இருவரும் தலா ரூ.1 லட்சமும் மாதச் சம்பளமாக எடுத்துக்கொண்டு உள்ளனர்.

அனுபவ் மிட்டலுடன் இருந்தவர்கள்  ஸ்ரீதர் பிரசாத் (40), மகேஷ் தயால்(25) ஆகியோர். இவர்களில் ஸ்ரீதர் பிரசாத் எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். இவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்களது மோசடி திட்டத்துக்காக இவர்கள் டெல்லியில் ஒரு கட்டிடத்தையும் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கின்றனர்.

இவர்கள் மீது 1 லட்சம் பேர் புகார் கொடுத்துள்ளனர். பணத்தை ஏமாந்தவர்களுக்கு வங்கிகளில் இவர்கள் டெபாசிட் செய்த பணத்தை பெற்று, திருப்பிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

கைது செய்யப்பட்டுள்ள மிட்டல் மத்திய உள்துறை அமைச்சருடன் இருந்த படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பா.ஜ.க.மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி.

மக்களை ஏமாற்றிய மோசடி குற்றவாளி மிட்டலுக்கும் ராஜ்நாத்சிங்குக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சிகள்….