சென்னை:
மிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக உதய மானது. தமிழக முதல்வர்  பழனிசாமி மாவட்டத்தின் பணிகளை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருந்த  5புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தென்காசி மாவட்டம் 33வது மாவட்டமாக உதயமான நிலையில், பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டம் 34வது மாவட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது. அதையடுத்து, வேலூர் மாவட்டத்தை 3ஆக பிரித்து, திருப்பத்தூர் மாவட்டத்தை  35வது மாவட்டமாகவும், ராணிப்பேட்டையை 36வது மாவட்டமாக அறிவித்து, நிர்வாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் தமிழகத்தின் 37-வது மாவட்டமாக தொடங்கப்பட்டு உள்ளது.

முன்னதாக  விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், தமிழகத்தின் 37வது புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இந்த மாவட்டம்,  2 ஆயிரத்து 944 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 லட்சத்து 41 ஆயிரத்து 572 பேர் வசிக்கின்றனர்.

செங்கல்பட்டு புதிய மாவட்டத்துடன், செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம் என மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன. பல்லாவரம், ஆலந்தூர், வண்டலூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய 8 தாலுகாக்களை கொண்டுள்ளது செங்கல்பட்டு.

புனித தோமையார் மலை, காட்டாங்குளத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்ளும் உண்டு. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் என 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்தாலும், இம்மாவட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி இல்லை.

உலக பிரசித்தி பெற்ற மாமல்லபுரம், முட்டுக்காடு படகு குழாம், கடப்பாக்கம் கலங்கரை விளக்கம், முதலியார் குப்பம் படகு குழாம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என சுற்றுலாத் தலங்கள் இடம்பெற்றுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில்,  திருப்போரூர் முருகன் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம், கோவளம் தர்கா, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயம் என பல்வேறு வழிப்பாட்டு தலங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.