வெளிநாடுகளில் கொரோனாவால் இறந்த மலையாளிகள் எத்தனை பேர்?

துபாய்: வெளிநாட்டு வாழ் மலையாளிகளில்(கேரள மாநிலத்தவர்), ஏப்ரல் 22ம் தேதி வரையிலான நிலவரப்படி, மொத்தம் 38 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில், 26 மரணங்கள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுவாழ் இந்தியர்களில், மலையாளிகள் குறிப்பிடத்தக்கவர்கள். குறிப்பாக, வளைகுடா நாடுகளில் அவர்களின் செல்வாக்கு அதிகம். அமெரிக்காவிலும் பலர் வசிக்கின்றனர். இந்நிலையில், ஏப்ரல் 22 வரையிலான நிலவரப்படி, வெளிநாடுகளில் வசிக்கும் மலையாளிகளில் மொத்தம் 38 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.

இதில் 26 பேர் அமெரிக்காவில் வசித்தவர்கள். இதில் பெரும்பாலான மரணங்கள் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி உள்ளிட்ட மாகாணங்களில் நிகழ்ந்துள்ளன.
இவர்களில் பலர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றாலும், இளவயதினரும் மரணமடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 21 வயதிலுள்ள இருவரும், 38 வயதிலுள்ள ஒருவரும் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமாக, 24 லட்சம் மலையாளிகள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வளைகுடா நாடுகளில் வாழ்கின்றனர் (குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம்) என்பது குறிப்பிடத்தக்கது.