பீகாரில் இஸ்லாமிய முதியவரை அடித்துக் கொன்றதாக 38 பேர் கைது

சீதாமார்கி, பீகார்

துர்கா பூஜை நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு இஸ்லாமிய முதியவரை அடித்துக் கொன்று பிணத்தை எரித்துக் கொன்றதாக 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று பீகாரில் உள்ள சீதாமார்கி என்னும் ஊரில் துர்கா பூஜை ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் ஊர்வலத்தை சேர்ந்தவர்கள் அந்த பகுதி வழியாக ஊர்வலத்தை திருப்பினார்கள்.

காவல்துறையின் தடையையும் மீறி அந்த பகுதிக்குள் ஊர்வலம் சென்றது. அதை ஒட்டி அங்கு இரு பிரிவினருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. காவல்துறை தலையிட்டு இருவரையும் பிரித்தனர். அப்போது ஒரு பிரிவினர் அந்த பக்கம் வந்த ஒரு இஸ்லாமிய முதியவரை இழுத்துச் சென்றனர்.

அந்த முதியவரை அடித்துக் கொன்ற கும்பல் அவரை எரித்து விட்டது. இந்த நிகழ்வு புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதியப்பட்டு வைரலானது. அதன் பிறகு இறந்த முதியவர் 80 வயதான ஜைனுல் அன்சாரி எனவும் அவர் தனது மகள் வீட்டுக்கு சென்று திரும்பும் வழியில் கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்தது.

இந்த வழக்கை ஒட்டி 6 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன. அத்துடன் இது வரை இந்த நிகழ்வில் சம்மந்தப்பட்ட 38 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து வருகிறது.