பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை: அமைச்சர் சரோஜா

--

சென்னை:

“பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்”, என்று தமிழக சமூக நலத்துறை  அமைச்சர் சரோஜா கூறி உள்ளார்.

வயதான முதியோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம், ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

அமைச்சர் சரோஜா

இந்த திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, 400 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பி லான உதவிகளை வழங்கினார். அதைதொடர்ந்து பேசிய அமைச்சர்,

இளைய சமுதாயத்தினர் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை அன்போடும், பரிவோடும் கவனித்துக்கொள்ள வேண்டியது  உங்களது  தலையாய கடமை. பிள்ளைகளால் அவதிப்படும் முதியோரை பாதுகாக்கவே  அரசு சட்டம் இயற்றி யுள்ளது.

அதன்படி சிரமத்திற்குள்ளாகும் முதியோர், மாவட்ட வருவாய் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். பெற்றோரை சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார்.

ஏற்கனவே மத்திய அரசு,  வயது முதிர்ந்த பெற்றோரின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. இதில் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள், மருமகன், பேரன் போன்றவர்களும் மூத்த பெற்றோரை பாதுகாக்க வேண்டும் என்றும், பெற்றோர்களை பராமரிக்க தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், வயது முதிர்ந்த பெற்றோரை கைவிடுவோருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில்  சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

சமீபத்தில் மும்பை உயர்நீதி மன்றமும், பெற்றோர்களை துன்புறுத்தும் பிள்ளை களுக்கு அவர்களின் சொத்துக்களை கேட்க உரிமை கிடையாது என்று அதிரடியாக தீர்ப்பு கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.