திருப்பதி பிரமோற்சவம் 3வது நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாள் விழா நடைபெறுகிறது. இன்றைய விழாவில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது.
மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடைபெறும்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. 3-ஆம் நாளான இன்று மலையப்ப சுவாமி, சிம்ம வாகனத்தில் நரசிம்மர் அலங்காரத்தில் எழுந்தருளினார். நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாட வீதியின் இரு புறத்திலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடி சென்றனர். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி, கோலாட்டம், பரத நாட்டியம் ஆடிக்கொண்டு மாட வீதிகளில் வலம் வந்தனர். மாட வீதிகளில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.