சென்னை,

நாட்டையே  உலுக்கி உள்ள மிகப்பெரிய வருமான வரித்துறையினரின் சோதனை தமிழகத்தில், சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் உள்ள  சசிகலாவின் குடும்பங்களில்  நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 1800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு நடத்திய இந்த சோதனை இன்றும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 3வது நாளாக தொடர்கிறது.

சசிகலாவுக்கு சொந்த ஜெயா டிவி அலுவலகம், வேளச்சேரி பீனிக்ஸ் மாலின் உள்ள ஜாஸ் சினிமாஸ், கோட நாடு எஸ்டேட் உள்பட அவர்களது உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள், கார் டிரைவர்கள், உதவியாளர்கள்,  ஜோதிடர்கள் உள்பட அனைவரது வீடுகளையும் சல்லடை போட்டு சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சோதனையின்போது, சசிகலா உறவினர்கள் தொடங்கிய 60 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சென்னை நீலாங்கரையில் உள்ள டி.டி.வி.தினகரனின் சகோதரர் பாஸ்கரனின் பங்களாவில் இருந்து  கணக்கில் வராத 7 கிலோ தங்க நகைகளும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் சசிகலாவின் உறவினர்கள் கருப்பு பணத்தை மாற்றுவதற்காக சுமார் 60 போலி நிறுவனங்களை தொடங்கி உள்ளது சோதனையின்போது   கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சோதனை முழுவதும் முடிவடைந்த பிறகுதான் அதிகாரப்பூர்வமான விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.