Random image

பேரூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் 3வது திட்டம்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை:

சென்னை பேரூர் அருகே  நாளொன்றுக்கு 40 கோடி  லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அந்த திட்டம் குறித்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு ஏற்கனவே கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலியில் நாளொன்றுக்கு 9 கோடி லிட்டரும் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையமும், மீஞ்சூர் அருகே தினசரி 9 கோடி லிட்டரும் தண்ணீர் சுத்தரிக்கும்  நிலையங்களும் இயங்கி வருகின்றன.

இதைத்தொடர்ந்து நெம்மேலியில் மேலும் ஒரு பிரமாண்ட ஆலை நிறுவ கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். அதன்மூலம் நாள் ஒன்றுக்கு  15 கோடி லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும். அதுபோல, பேரூரில் தினசரி  40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் திட்டத்திற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன்  6 ஆயிரத்து 87 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் விதமாக இந்த ஆலை அமைக்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் மூலம் சென்னையில் பல்வேறு இடங்களில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.