ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா இந்த போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

usman

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. ஏற்கெனவே நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றிப்பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது ஒரு நாள் போட்டி ரஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் வெற்றிப்பெற வேண்டுமென்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர்.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தனர். அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா முதலில் களமிறங்கினர். இருவரும் போட்டியின் தீவிரத்தை உணர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் கவாஜா மற்றும் ஆரோன் அரைசதம் எடுக்க ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் சேர்த்திருந்தது.

aut

அதன்பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரோன் பின்ச் 31.5வது ஓவரில் 99 பந்துகளுக்கு 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை குல்தீப் யாதவ் எடுத்தார். இருப்பினும் நிலைத்து விளையாடிய கவாஜா 37வது ஓவரில் சர்வதேச அளவில் முதல் சதம் அடுத்தார். இதில் 11 பவுண்ட்ரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். தொடர்ந்து விளையாடிய க்வாஜா 38வது ஓவரில் ஷமியின் பந்து வீச்சை எதிர்க் கொண்ட போது 104(113 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த மேக்ஸ்வெல் 47 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 31 ரன்களும், அலெக்ஸ் 21 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது. இதையடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

india

இந்த போட்டி தொடங்கும் முன்பாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மகேந்திர சிங் தோனி சக வீரர்களுக்கு ராணுவ கேப்பை அளித்தார். ராணுவ கேப் அணிந்துக் கொண்டு வந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். அதுமட்டுமின்றி, சர்வதேச மகளிர் தினத்திற்காக வண்ண பலூன்களை மைத்தானத்தில் பறக்கவிட்டு பிசிசிஐ அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது.