3வது டி20 கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா

லண்டன்:

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது. இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை இங்கிலாந்து அணி குவித்தது.

இந்தியா அணியின் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டும், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், சாஹர், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷிகர் தவான் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

ஆனால், ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடி டி20 போட்டிகளில் 3வது சதத்தை அடித்து அசத்தினார். இறுதியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை தட்டிச் சென்றது.