3வது அணி: ஒடிசா முதல்வருடன் தெலுங்கானா முதல்வர் சந்திப்பு

புவனேஷ்வர்:

தெலுங்கான சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர ராவ்,4 மாநிலங்களுக்கு குடும்பத்தினருடன்  சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியா ஒடிசா சென்றுள்ள தெலுங்கானா முதல்வர் அங்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயகத்தை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு எதிராக 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திராவில் உள்ள  ராஜஸ்யமலா கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அதைத் தொடர்ந்து ஒடிசா சென்றார்.  அங்கு நேற்று மாலை மாநில முதல்வர்  நவீன் பட்நாயக்கை புவனேஷ்வரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக வலிமையான மூன்றாவது அணி அமைக்க மாநில கட்சிகளின் கூட்டணி அவசியம் தேவை என்றார்.

தொடர்ந்து  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்திக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.

பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு விமானத்தை ஒரு மாத காலத்திற்கு வாடகைக்கு எடுத்திருப்பதாக அவரது கட்சி அறிவித்துள்ளது.